அஸ்வெசும கொடுப்பனவில் அதிரடி மாற்றம்! ஒரு லட்சம் குடும்பங்கள் நீக்கம்? புதிய தகவல் வெளியீடு
இலங்கையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக வழங்கப்பட்டு வரும் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் தொடர்பாக தற்போது முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மே மாத கொடுப்பனவு, புதிய பயனாளிகள் இணைப்பு மற்றும் சில குடும்பங்கள் நீக்கப்படுவது குறித்து அரசு தரப்பில் விளக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அஸ்வெசும திட்டம் என்பது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவியாக வழங்கப்படும் ஒரு முக்கிய நலன்புரி திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் தற்போது பல லட்சம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றன.
இந்நிலையில், மே 2026 மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று முதல் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயனாளிகள் தங்களுடைய வங்கி கணக்குகள் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், எதிர்வரும் 2027 முதல் 2029 வரையான காலப்பகுதிக்குள் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் அஸ்வசும திட்டத்திலிருந்து நீக்கப்பட உள்ளதாக கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த குடும்பங்கள் எந்த காரணத்தால் நீக்கப்படுகின்றன என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு பதிலாக, தற்போது நிலையான வருமானம் பெற்று தங்களுடைய வாழ்க்கையை முன்னேற்றிய குடும்பங்களே இந்த திட்டத்திலிருந்து நீக்கப்பட உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குடும்பங்களுக்கு மாற்று வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட உள்ளன. அதன்படி:
- சுயதொழில் உதவித்தொகை
- கோழிப்பண்ணை அமைக்கும் உதவி
- தொழிற்பயிற்சி திட்டங்கள்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழிகாட்டல்
- ஜப்பானிய மொழி பயிற்சி
போன்ற பல விசேட சலுகைகள் வழங்கப்பட்ட பின்னரே அவர்கள் திட்டத்திலிருந்து வெளியேற்றப்பட உள்ளனர்.
இதேவேளை, தற்போதுவரை எந்தவித நலன்புரி கொடுப்பனவும் பெறாமல் காத்திருக்கும் தகுதியான குடும்பங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. நீக்கப்படும் குடும்பங்களின் இடத்தில் புதிய தகுதியான குடும்பங்கள் இணைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பொருளாதார வசதி இருந்தும் அஸ்வெசும கொடுப்பனவு பெற்று வரும் சிலர் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அவற்றுக்கும் விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment