கனடாவில் முதல் ஹண்டாவைரஸ் பாதிப்பு உறுதி! சொகுசு கப்பல் பயணியிடம் ஆபத்தான Andes வைரஸ் கண்டுபிடிப்பு!
கனடாவில் முதல் முறையாக ஹண்டாவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எம்.வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த நபர் ஒருவருக்கு ஆபத்தான ‘ஆன்டிஸ் ஸ்டிரெய்ன்’ (Andes Strain) ஹண்டாவைரஸ் தொற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா கூட்டாட்சி சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இந்த சொகுசு கப்பலில் பயணித்த நான்கு பேரில் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெள்ளிக்கிழமை அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் ஹண்டாவைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனை தொடர்ந்து அவரது மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக வின்னிபெக்கில் உள்ள தேசிய நுண்ணுயிரியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள இறுதி சோதனை முடிவுகளில், அவருக்கு மனிதர்களிடையே பரவக்கூடிய ஆபத்தான Andes வகை ஹண்டாவைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கனடா பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவருடன் பயணம் செய்த மற்றொரு நபருக்கு நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித தொற்றும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. தற்போதைக்கு வேறு யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த உயர் ஆபத்து குழுவைச் சேர்ந்த அனைவரும் தீவிர தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டு, உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே பரவும் ஆபத்து கொண்ட இந்த Andes ஹண்டாவைரஸ் பரவலை கட்டுப்படுத்த கனடா சுகாதார பிரிவினர் அவசர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது கனடா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Post a Comment