இலங்கை பெண் ஒருவர் குவைத் நபர் ஒருவரை ஏமாற்றி கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி சட்டவிரோதமாக குவைத் குடியுரிமை பெற்ற மோசடி
குவைத்தில் 33 ஆண்டு மோசடி பெண்ணின் தந்திரம் அம்பலம்!
குவைத் நாட்டில் ஒரு இலங்கை பெண்ணின் 33 ஆண்டு மோசடி அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு குவைத் நாட்டைச் சேர்ந்த ஒருவரை ஏமாற்றி, கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடி, சட்டவிரோதமாக குவைத் குடியுரிமை பெற்றுள்ளார்.
இச் சம்பவம் குவைத்தின் அடையாள மற்றும் குடியுரிமை அமைப்புகளில் உள்ள பெரும் பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,
கோஸ்டா என்று அடையாளம் காணப்பட்ட இந்த இலங்கைப் பெண், 1992 ஆம் ஆண்டு வீட்டு வேலைக்காக குவைத்துக்கு சென்றுள்ளார்.
2 ஆண்டுகளுகளில், தப்பி ஓடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் நாடு கடத்தப்பட்டார். ஆனால், 1996 இல் புதிய பெயர் மற்றும் கடவுச்சீட்டுடன் மீண்டும் குவைத் நுழைந்தார். அப்போது பயோமெட்ரிக் பரிசோதனை இல்லாததால், அவரால் எளிதாக குடிவரவு சோதனைகளை கடந்து செல்ல முடிந்தது.
குவைத்திற்கு திரும்பிய பின்னர், கோஸ்டா ஒரு குவைத் டாக்ஸி ஓட்டுநரை திருமணம் செய்தார். குவைத் தேசிய குடியுரிமைச் சட்டத்தின் 8வது பிரிவின்படி, ஒரு வெளிநாட்டுப் பெண், குவைத் நாட்டவரை திருமணம் செய்து, அவருக்கு குழந்தை பெற்றால் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த சட்டத்தைப் பயன்படுத்தி, கோஸ்டா தனது மோசடியை தொடங்கியுள்ளார்.
கோஸ்டா, தான் கர்ப்பமாக இருப்பதாக தன் கணவரை நம்ப வைத்தார். ஆனால், உண்மையில் மற்றொரு இலங்கை பெண்ணின் குழந்தையை, தனது அடையாள அட்டையை பயன்படுத்தி குவைத் மருத்துவமனையில் பதிவு செய்தார். இந்த குழந்தை, கோஸ்டாவின் மற்றும் அவரது கணவரின் மகளாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த குழந்தைக்கு இருவருக்கும் உயிரியல் ரீதியாக எந்த தொடர்பும் இல்லை என தெரிய வந்துள்ளது.
2000ஆம் ஆண்டு தனது திருமணம் மற்றும் தாய்மை என்ற பொய்யை அடிப்படையாக வைத்து, கோஸ்டா குவைத் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, அதை பெற்றார்.
2008ஆம் ஆண்டில், திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளால், கோஸ்டா தனது கணவரை விவகாரத்து செய்தார். அப்போது குழந்தை தனது கணவருடையது இல்லை என ஒப்புக்கொண்டார். இதை அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2021இல், கோஸ்டாவின் முன்னாள் கணவர் முறையாக புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை தொடங்கியது. டி.என்.ஏ. பரிசோதனையில், குழந்தைக்கு கோஸ்டாவோ அவரது முன்னாள் கணவரோ உயிரியல் ரீதியாக தொடர்பில்லை என்பது உறுதியானது.
2024இல், குடியுரிமை விவகாரங்களுக்கான உயர் குழு,கோஸ்டா மோசடி, ஆவண மோசடி மற்றும் புனையப்பட்ட அடையாளத்தை பயன்படுத்தி குடியுரிமை பெற்றதாக தீர்ப்பளித்தது.
இதையடுத்து, அவரது குடியுரிமை ரத்துச் செய்யப்பட்டது. பின்னர், அவரது மகளாக பதிவு செய்யப்பட்டவர் இப்போது வயது வந்தவர். அவரது குடியுரிமையும் ரத்துச் செய்யப்பட்டது.
அஅதிகாரிகள், குழந்தையின் உண்மையான தாய், குவைத்தில் குழந்தை பிறந்த போது இருந்த இலங்கை பெண்ணாக இருப்பதை கண்டறிந்தனர்.
அவர் பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்தார். தற்போது, குழந்தைக்கு இலங்கை அடையாள ஆவணங்கள் வழங்கப்பட்டுகின்றன.
இந்த நிகழ்வு, குவைத்தின் குடியுரிமை மற்றும் அடையாள சரிபார்ப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.
இது போன்ற மோசடிகளைத் தடுக்க, குவைத் அரசு மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment